மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்தி, அதன் பயன்பாட்டை அடியோடு ஒழிக்க காவல் துறைக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவின் அடிப்படையில், கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமம் கடற்கரையோரத்தில், நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 11) இரவு இரண்டு மர்ம பொட்டலங்கள் கரை ஒதுங்கி இருப்பதாக மீனவர்கள், கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தரங்கம்பாடி கடற்கரையோர காவல் நிலைய போலீசார், அந்த இரண்டு பொட்டலங்களைக் கைப்பற்றி சோதனை செய்தனர். சோதனையில் அந்த மர்ம பொட்டலங்களில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:தொழிலதிபருக்கு ரூ.500 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடி - வங்கி மேலாளர் உள்பட மூவர் கைது!