ஆசிரியர் போக்ஸோவில் கைது: பள்ளியில் பணம் கேட்டதாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் மயிலாடுதுறை: சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சீனிவாசன்(34). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றி, கூடுதலாக பள்ளி மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருமணமாகாத இவர், அதே பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவன் ஒருவரிடம் தகாத முறையில் தன்பாலின சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். மேலும் அப்பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் பல மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக, அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் மீது அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் தொடர்பில்லாத பள்ளியில் உள்ளவர்களையும் வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா பள்ளி நிர்வாகத்திடம் ரூ.50,000 பெற்றதாகப் புகார் எழுந்தது. ஆகையால், பள்ளி நிர்வாகத்தினர் டிஎஸ்பி மற்றும் தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சங்கீதாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பணியில் அலட்சியமாக இருந்ததாகவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மெத்தனமாக விசாரித்ததாகவும் இதனால் பொதுமக்கள் அதிருப்தியடைந்து புகார் அளித்ததன்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சங்கீதாவை தற்காலிகப் பணியிடைநீக்கம் செய்து டிஐஜி கயல்விழி உத்தரவிட்டார்.