அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார். அதுபோல அனைத்து மதத்திலும் உலகிலுள்ள எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, நாகை மாவட்டம், நாகூர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராதாகிருஷ்ணன் திகழ்ந்து வருகிறார். பொதுவாக காவல் அதிகாரிகள் என்றால் அன்பின்றி கோபக்காரர்களாகவும், கடுகடு என்ற குணத்திலும் தான் இருப்பார்கள் என்பது பலரின் பொதுவான கருத்து. ஆனால், அக்கருத்தை மறுக்கும் விதமாக இவர் புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் அன்பாகவும், பொறுமையுடனும், அமைதியுடனும் நடந்துகொண்டு அப்பகுதி மக்களின் அன்பை பெற்றுவருகிறார். அது மட்டுமின்றி, அப்பகுதி நாய்களின் அன்பையும் பல்வேறு நற்செயல்கள் மூலம் தன்வசப் படுத்தியுள்ளார்.
குறிப்பாக, தினந்தோறும் இரவு நேரங்களில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் பசியுடன் தன் குட்டிகளுடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவளித்து, அவற்றுடன் தன் அன்பை பரிமாறிக் கொள்கிறார்,இந்த மனிதாபிமானமிக்க காவல் ஆய்வாளர்.