மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, வழுவூர் அருகே உள்ள பண்டாரவாடை கலைஞர் நகரைச் சேர்ந்தவர், கலைவாணன் (40). இவர் மீது நான்கு கொலை வழக்குகள், ஏழு கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு (மே 13) 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டு வெடிகுண்டு வெடித்து, கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டானது.
மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இது குறித்து நேற்று இரவு, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆனால், பாதிக்கப்பட்டவரின் தரப்பில் தான் வீட்டின் வெளியே சென்றபோது, அங்கிருந்த மூன்று அடையாளம் தெரியாதவர்கள் வெடிகுண்டை தன் மீது வீசியதாகவும், அதனைக் கையில் பிடித்தபோது வெடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.