நாகப்பட்டினம்:ஒன்றிய அரசின் மாதாந்திர சிலிண்டர் விலை உயர்வால் நடுத்தர குடும்பப் பெண்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நாகையில் வீட்டிலிருந்த சிலிண்டரை ஒருவர் திருடிச் சென்றிருப்பது அதிர்ச்சியையும் நகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
நாகப்பட்டினம் சிவன் கீழ வீதி பகுதியைச் சேர்ந்தவர், தியாகராஜன். கோயில் பூசாரியான இவர் தனது மனைவி சரோஜா, மகன் சக்திதாஸ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி 1050 ரூபாய் கொடுத்து வாங்கிய சிலிண்டரை வீட்டின் வராண்டாவில் வைத்துவிட்டு நேற்றிரவு (நவ.23) மூவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.
சிலிண்டரை திருட முகமூடிப் பிரவேசம் செய்த திருடன்
அப்போது நள்ளிரவு 1 மணியளவில் முகமூடி அணிந்துகொண்டு கேட்டை திறந்து உள்ளே வந்த திருடன், வீட்டின் வெளியில் இருந்த சிலிண்டரை திருட முயன்றான்.
அப்போது, லேசாக சிலிண்டர் நகர்த்தும் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக வீட்டினுள் இருந்த சக்திதாஸ் வெளியே வந்துபார்த்தபோது சிலிண்டரை திருடிவிட்டு ஒருவர் தப்பியதைக் கண்டார்.
காவல் துறை விசாரணை
வீட்டின் வெளியே இருந்த சிலிண்டர் திருட்டு தொடர்ந்து அவரை துரத்திப் பிடிக்கவே, அவரை தள்ளிவிட்டு, இருசக்கர வாகனத்தில் ஏறி திருடன் சிலிண்டருன் தப்பினார். இச்சம்பவம் குறித்து தியாகராஜன் 'காணாமல் போன சிலிண்டரை எப்படியாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்' என வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சிலிண்டர்களுக்கு மீண்டும் கூடுதல் மானியம் - ஒன்றிய அரசு நடவடிக்கை