மயிலாடுதுறை மணக்குடியை சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி ராஜராஜேஸ்வரி. ஜெயக்குமாருக்கும், அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் இடையே மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள இடம் தொடர்பான சொத்து பிரச்னை வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனால் ஏற்பட்ட மோதலால் இருதரப்பினரும் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஜெயக்குமார் மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது மயிலாடுதுறை காவல்துறையினர் கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டுவதாக ராஜராஜேஸ்வரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இதற்கிடையில், கச்சேரி சாலையில் ராஜராஜேஸ்வரி நடத்திவரும் வணிக நிறுவனம் முன்பு கடந்த ஒருவாரமாக எதிர்தரப்பினர் ஜல்லி, செங்கற்களை அடுக்கி வைத்துள்ளதுடன், விற்பனை விளம்பர பதாகையும் வைத்துள்ளனர்.
இதுகுறித்து, ராஜராஜேஸ்வரி மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, திருச்சி சரக ஐஜி ஆகியோரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், மனம் உடைந்த அவர் மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு தனது குடும்பத்தினருடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தனது வணிக நிறுவனம் முன்பு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனக் கூறியதால் தொடர்ந்து காவல்துறையினர் கடைவாசலில் கொட்டிய ஜல்லிகளை ஓரமாக அப்புறப்படுத்த நடடிவக்கை எடுத்தனர்.
ஆனால் கடைகளுக்கு செல்லகூடிய பாதைகளில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறி மாலை ஐந்து மணி அளவில் தொடங்கிய தர்ணா போராட்டம் தொடர்ந்து நீடித்தது. இந்நிலையில் நள்ளிரவு 1.30மணிக்கு 100க்கும்மேற்பட்ட காவலர்கள் இரண்டு சிறுமிகள், ராஜராஜேஸ்வரி, வழக்கறிஞர் உள்பட 21 நபர்களை நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இறுதிவரை ஆக்கிரமிப்பை அகற்ற முன்வராத காவலர்களை கண்டித்து அனைவரும் கண்டன முழக்கமிட்டவாறே சென்றனர். பின்னர் அவர்களை தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.