நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறை நாட்டில் வன்னியர் சங்கம் என்ற பெயரில் உள்ள 10 ஆயிரம் சதுர அடி இடம் தமிழ்நாடு அரசின் வன்னியர் பொதுச்சொத்து நலவாரியம் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த இடம் தொடர்பாக பாமகவின் வன்னியர் சங்கம் மற்றும் பல்வேறு வன்னிய இயக்கங்கள் இடையே கடும் வாக்குவாதம் எழுந்து வருகிறது.
இந்நிலையில், சுதந்திர போராட்ட தியாகி சாமி நாகப்ப படையாட்சிக்கு சிலை வைக்க வன்னியர் மேம்பாட்டு இயக்கத்தினர் தமிழ்நாடு அரசின் வன்னியர் பொதுச்சொத்து நலவாரியத்திடம் அனுமதி பெற்றனர். அதன்படி, பிரச்னையாக உள்ள இடத்தில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி மாவீரன் வன்னியர் சங்க நிறுவனர் விஜிகே மணிகண்டன் தலைமையில் சாமி நாகப்ப படையாட்சி சிலை திறக்கப்பட்டது.
இதற்கு பாமக பொறுப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 10ஆம் தேதி 'டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கத்திற்கு சொந்தமானது' என அறிவிப்பு பலகை வைத்து அவ்விடத்தை பூட்டி சென்றதால் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து அப்பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டது.