முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை குறித்து விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையில் அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்யக்கோரி நாகை மாவட்டம் மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துறையிடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தலைமையில் புகார்மனு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியமணிசங்கர், 1991ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டது. ஆனால், மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சி போன்று தற்போது நடைபெறுகிறது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி உருவாக்கிய பொருளாதார கொள்கைகளை பாஜக வீணாக்குகிறது. தேசிய அளவில் மன்மோகன்சிங் ஆட்சியில் இந்தியாவின் மீதிருந்த நம்பிக்கையை தற்போது இந்தியா இழந்திருப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.
ராஜிவ் காந்தி மரணம் குறித்து பேசிய சீமான் gற்றிய கேள்விக்கு, சீமானின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. நாங்கள் தான் கொன்றோம் என்று பெருமை பேசும் சீமானை கைது செய்யாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார். மேலும், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி இறந்தது சீமான் போன்ற ஆட்களால் தான் என்று கூறியவர், அவருக்கு கட்டாயமாக தண்டனை அளிக்க வேண்டும் என்றார்.
பிரதமர் மோடியை சாடிய மணிசங்கர் ஐயர் இதனிடையே, ஜனநாயக ஆட்சியை மோடி அரசு குட்டிச்சுவராக்குகிறது. நோபல் பரிசு பெற்ற வல்லுநர்கள் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக உள்ளதாக கூறும் நிலையில் அதுகுறித்து படிக்காத பிரதமர் மோடி சொல்வதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும் என்று சர்ச்சைக்குரிய வகையில் மணிசங்கர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.