நாகை மாவட்டம், மயிலாடுதுறை வீடியோ மற்றும் போட்டோகிராஃபர் நலச்சங்கம் சார்பில், நலிவடைந்த வீடியோ மற்றும் போட்டோகிராஃபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் வழங்கப்பட்டது.
கரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் காலையிலேயே முகக்கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஒன்று கூடினர்.
அவர்களில் ஒரு சிலருக்கு சங்க நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது, அதனை பெறுவதற்காக பொதுமக்களும் அங்கு திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் நலத்திட்ட உதவிகள் பெற, வந்த புகைப்பட மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகினர்.
போட்டோகிராஃபர் சங்க நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக விலகலைப் பின்பற்றாமல் கூட்டம் கூடியதால் பரபரப்பு சமூக விலகலைப் பின்பற்றாமல் கூட்டம் கூடியதை அறிந்த நகர் நல அலுவலர் மருத்துவர் பிரதீப் கிருஷ்ணகுமார், அங்கு வந்து அவர்களை எச்சரித்து சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுரை வழங்கி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து நகராட்சி மற்றும் காவல் துறை அனுமதி பெறாமல் கூட்டத்தைக் கூட்டியது தொடர்பாக நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுப்பது குறித்த அறிவிப்பு நோட்டீஸ் வீடியோ போட்டோகிராஃபர்ஸ் சங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.