மயிலாடுதுறை: கூறைநாடு பகுதியில் 2014ஆம் ஆண்டு முதன்மை காவலர் மூர்த்தி என்பவர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தார். அவர்கள் திடீரென முதன்மை காவலர் மூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இது குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் கொலை முயற்சி, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்ட வெள்ளப்பள்ளம் வினோத் அவரது கூட்டாளி கோகுலகிருஷ்ணன் (32) ஆகிய இருவரை கைதுசெய்தனர்.
இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இவ்வழக்கு தொடர்பாக நேற்று (டிசம்பர் 3) விசாரணைக்கு வந்த இருவருக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா மூன்றாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கௌதமன் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசென்றனர். என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி மணல்மேடு சங்கரின் கூட்டாளியான வெள்ளப்பள்ளம் வினோத் மீது நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வினோத்தின் கூட்டாளி கோகுலகிருஷ்ணன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட எட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கசந்த காதல்.. கைவிட்ட காதலன்... மாணவி எடுத்த விபரீத முடிவு!