மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நெப்பத்தூர் கிராமத்திலுள்ள தனியார் செங்கல் சூளையில், நிம்மேலி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சீனிவாசன் (40)’ என்பவர் கடந்த ஏப்.17ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொணடார்.
இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி இறந்தவரின் உறவினர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சீனிவாசனின் உடலை மீட்ட திருவெண்காடு காவல் துறையினர் உடற்கூராய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் தற்கொலைக்கு தூண்டியது, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சூளை உரிமையாளர் சுரேஷ் (60), அவரது மகன் சித்தார்த் (38). மேற்பார்வையாளர் மோகன்ராஜ் (61) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், கொலை வழக்காக மாற்ற வேண்டும், சிபிசிஐடி விசாரணை நடத்தவேண்டும், செங்கல் சூளைக்கு சீல் வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சீனிவாசன் உடலை வாங்காமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூலி தொழிலாளி தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் இந்த போராட்டத்தால் செங்கல் சூளைக்கு சீல் வைக்கப்பட்டது. பத்தாவது நாளான இன்று (ஏப்.26) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் அகற்ற முயன்றனர். இதனால், காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுகும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரண்டு மணி நேரமாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் இறுதியாக முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து மாவட்ட ஆட்சியர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது, இறந்த சீனிவாசனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இறந்த சீனிவாசன் உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்ய்பட்டுள்ளதால் புதன்கிழமையன்று உடலை பெற்றுகொள்வதாக போராட்டக்காரர்கள் கூறினர். 10 நாள்களாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தை ஒட்டி 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.