மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரையில் மருத்துவமனை தெருவில் இளையாளுர் மற்றும் குளிச்சாறு ஊராட்சிகளை சேர்ந்த 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் மருத்துவமனைக்குச் செல்லும் இணைப்பு சாலையான 100 அடி மண்சாலையை தார் சாலையாக அமைத்துதரக்கோரி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் குளிச்சாறு ஊராட்சி மன்றத் தலைவர் பானு தன்சொந்த செலவில் புதிதாக தார்சாலை அமைத்து தருவதாகக் கூறி இளையாளுர் ஊராட்சி நிர்வாகத்தின் அனுமதியை பெறாமல் சாலை பணிகளைத் தொடங்கியுள்ளார்.
செம்மண்சாலை அமைக்கப்பட்டு கப்பிகற்கள் நேற்று சாலையில் பரப்பப்பட்டது. இதற்கு இளையாளுர் ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்ததால் சாலையில் பரப்பப்பட்ட கப்பிகற்கள் இரவோடு இரவாக எடுத்துச் சென்றுள்ளனர்.
'சாலையைக் காணவில்லை' என்று பேருந்தை சிறைபிடித்து மக்கள் சாலைமறியல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் சாலை பணியை தடுத்த இளையாளுர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், காணாமல் போன சாலையை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி அரசு பேருந்தை சிறைபிடித்து வடகரை மெயின் ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது"- கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன்!