மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட தத்தங்குடி கிராமத்தில் பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இரண்டு பேர் அரசு டாஸ்மாக் மதுபானம் அருந்தி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நேற்று உயிரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டது.
அதேநேரம், பழனி குருநாதன் மற்றும் பூராசாமி ஆகியோர் இறந்து கிடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனை செய்தது. இதில் மது பாட்டிலில் சயனைடு கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்திருந்தார். ஏற்கனவே, சந்தேக மரணம் என்று காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் தவறான தகவலை பதிவிடுவதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மங்கைநல்லூர் பகுதியில் இறந்த பழனி குருநாதன் வீட்டின் அருகே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் பொய்யான செய்தியை பரப்புவதாக முழக்கமிட்டனர். இதனால் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையில் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து, சாலை மறியலை கைவிட்டு போராட்டத்தை தொடர்ந்து வந்தனர். மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.