நாகை மாவட்டம், நாகூருக்கும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூருக்கும் இடையே உள்ளது பட்டினச்சேரி மீனவ கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகே தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நாகூர் , பட்டினச்சேரி கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால், தற்போது அதிக அளவிலான கடல் அரிப்பு ஏற்பட்டு, இக்கிராமத்தின் உள்ளே கடல் நீர் புகுந்து வருவதால் அப்பகுதியினர் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கடல் சீற்றத்தால் கடல் நீர் ஊர்ப் பகுதியில் உள்ளே அதிகளவில் புகுந்து, கரையோரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. மேலும், கடல் அரிப்பானது நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் நாகூர், பட்டினச்சேரி கடற்கரையில் மீதமுள்ள தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து அழிந்து வரும் சூழல் உருவாகியுள்ளது.
கடல் அரிப்புக்கும், பாதிப்புக்கும் முக்கியக் காரணம் அருகில் உள்ள தனியார் துறைமுகம் என அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே, துறைமுகத்தின் வளர்ச்சிக்காக ஒரு பகுதியில் கருங்கல் கொட்டப்பட்டதால் மறு பகுதியில் 300 மீட்டர் அளவிற்கு கடல் நீர் உள்ளே புகுந்து கடல் அரிப்பு அதிகரித்து இருப்பதாகவும், இதனால் படகுகளை நிறுத்த முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் தவித்து வருவதாகவும் மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.