மாம்பழங்களில் மல்கோவா, இமாம்பசந்த், அல்போன்சா, ருமானியா என பல்வேறு இனங்கள் உள்ளன. இருந்தாலும், மற்ற மாங்கனிகளில் இல்லாத வகையில் சுவையும், மணமும், பாதிரி மாம்பழத்திற்கு மிகவும் அதிகமாகும்.
பாதிரி மாம்பழம் பெயர் காரணம் என்ன?
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுவிசேஷ லுத்ரன் திருச்சபையில் பாதிரியாராக கல்விப்பணி, மதப்பரப்புரைக்காக 1847ஆம் ஆண்டு பணியாற்றியவர் பாதிரியார் ஓக்ஸ். ஜெர்மனியைச் சேர்ந்த பாதிரியார் ஓக்சும், அவருடைய மனைவி சாரல் என்பவரும், தோட்டக்கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இவர் பணியாற்றிய, சர்ச் வளாகத்தில் முதலில் 1847ஆம் ஆண்டு பாதிரியார் ஓக்ஸ் தனது மனைவியுடன் இணைந்து, ஒரு மாங்கன்றை ஒட்டு முறையில் உருவாக்கினார். அந்த மரத்தில் காய்த்த மாங்கனி நறுமனமும் சுவையுடன் இருந்தது. இதனை பாதிரியார் பொதுமக்களுக்கு கொடுக்கவே இந்த மாம்பழத்தை கிறிஸ்துவ பாதிரியார் உருவாக்கியதால், பாதிரி மாம்பழம் என்று பெயர்பெற்றது.
அப்படி என்னதான் இருக்கு பாதிரி மாம்பழத்தில்...!
மற்ற மாம்பழங்கள், காய்பருவத்தில் ஒரு வகையான புளிப்பு சுவையும், செங்காயில் ஒருவித புளிப்பு கலந்த இனிப்பு சுவையும், பழத்தில் இனிப்பு சுவையும் இருக்கும். ஆனால் பாதிரி மாம்பழம், காய், செங்காய் பருவத்தில், வாயில் வைக்க முடியாத அளவில் அதி பயங்கர புளிப்பு சுவையும், பழமான பின் அதிகமான இனிப்பு சுவையும் காணப்படும். அது மட்டுமின்றி, பாதிரி மாம்பழத்திற்கு என்று தனியான மணமும் அதன் சுவையை அதிகரிக்க ஒரு காரணமாகும்.
மாம்பழங்களின் ராணி பாதிரி மாம்பழமா?
ஒரு மூடப்பட்ட அறையிலோ, பீரோவிலோ பாதிரி மாம்பழத்தை வைத்து எடுத்தால், பலநாட்கள் வரையில் நறுமணம் வீசும் இயல்பு கொண்டது. இதனால் இது மாம்பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகின்றது.