மயிலாடுதுறை: பள்ளி மாணவர்களை ஏமாற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா காலத்தில் பள்ளிகள் இயங்காததால் தன்னுடன் பள்ளியில் படித்த சக நண்பர்கள் இருவருடன் விளையாட சென்றுவந்துள்ளான்.
அப்போது, சிறுவர்களுக்கு தரங்கம்பாடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அபுபக்கர் மகன் சமீர், திடீர் குப்பத்தைச் சேர்ந்த மதி மகன் அசோக், நகுதா தெருவைச் சேர்ந்த எபினேசர் மகன் ஆல்வின் ஆகிய இளைஞர்களின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞர்கள் சிறுவர்களுக்கு சிகரெட், மதுவைக் குடிக்கப் பழக்கி, அதனை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
பின்னர், அந்த வீடியோவை சிறுவர்களின் பெற்றோரிடம் காண்பித்து விடப்போவதாக சிறுவர்களை மிரட்டியும், அடித்துத் துன்புறுத்தியும் சுமார் 8 சவரன் தங்க நகைகள், ரூ.80,000 ரொக்கம் ஆகியவற்றை சிறுவன் வீட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவரச் சொல்லி பிடுங்கி பங்கு பிரித்துக் கொண்டுள்ளனர். மேலும், சிறுவனுக்கு பெற்றோர் வாங்கித் தந்திருந்த ரூ.61ஆயிரம் மதிப்புடைய ஆப்பிள் ஐ-போனையும் பிடுங்கியுள்ளனர்.
இதையடுத்து, தகவல் தெரிந்து சிறுவனின் பெற்றோர் சம்பந்தப்பட்ட இளைஞர்களை அணுகி கேட்டதற்கு போனையும், ரூ.15,000-ஐ மட்டும் இளைஞர்கள் திருப்பித் தந்துள்ளனர். இதேபோல், தரங்கம்பாடி பகுதியில் மேலும் இரண்டு பள்ளி மாணவர்களிடம் இதுபோன்று செயல்களைச் செய்து பணத்தை பறித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவர்களுக்கு போதை பழக்கத்தை ஏற்படுத்தி, அவர்கள் மூலமாக வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடியது, திருட்டுத் தனமாக வீடியோ எடுத்தது உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்து, நகை மற்றும் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் அளித்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 8 ஆண்டுகள் சிறை!