அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
நாகப்பட்டினம்: சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக கீழ்வேளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பிய காவிரி நீர் காரணமாக மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து குறுவை சாகுபடி மேற்கொண்டு வந்தனர்.
மேலும் உரிய நேரத்தில் அவ்வப்போது பெய்த மழையினாலும் விவசாயிகள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 45 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர்.
சாகுபடி செய்வதற்கு போதுமான தொழிலாளிகள், இயந்திரம் பற்றாக்குறை காரணத்தால் அறுவடை பணிகள் தாமதமாகி வந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 28) சூறைக்காற்றுடன் பெய்த கனமழை பெய்தது.
இதன் காரணமாக நாகப்பட்டினம், கீழ்வேளூர், மேலநாகூர், புலியூர், தென்கரை, வடகரை, தெத்தி, வடகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1, 500 ஏக்கர் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளன.
கடன் பெற்று ஏக்கருக்கு ரூபாய் 20 ஆயிரம்வரை செலவு செய்துள்ள நிலையில், கனமழை காரணமாக பெரும் இழப்பை சந்தித்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் வேளாண்துறையினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.