மயிலாடுதுறையில் 80-க்கும் மேற்பட்ட நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினசரி சராசரியாக 800 நெல் மூட்டைகள் கொள்முதல்செய்யப்படுகின்றன. தினசரி விவசாயிகள் சுமார் இரண்டாயிரம் மூட்டைக்கும் மேலாக நெல்லை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர். இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைகின்றன.
சராசரியாக ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஐந்தாயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுமார் பத்தாயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொள்முதல் நிலைய வளாகத்தில் விற்பனைக்காக திறந்தவெளியில் அடுக்கிவைத்து காத்திருக்கின்றனர். கடந்த சில நாள்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்ல லாரிகள் வராததால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நிரம்பி வழிகின்றன.
மேலும், கரோனா ஊரடங்கால் நெல் மூட்டைகளை அரவைக்கு கொண்டுசெல்ல சரக்கு ரயில்கள் சரிவர வராததாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்தத் தேக்கம் ஏற்பட்டுள்ளது.