மயிலாடுதுறை மாவட்டத்தில், சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெல்லினை கொள்முதல் செய்ய, 155 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. ஒரு நாளைக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் உடனுக்குடன் கிடங்குகளுக்கு எடுத்து செல்லாததால் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. திருவிழந்தூர், நல்லத்துக்குடி, வில்லியநல்லூர், தில்லையாடி, திருவிடைக்கழி, திருவிளையாட்டம் உள்ளிட்ட பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலைய வாசலில் மூட்டைகளை அடுக்கி வைத்து 10 நாட்களுக்கும் மேலாக நெல் மூட்டைகளைப் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில், லேசான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.