மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பரசலூர் அருகே கடுவெளி, மகாராஜபுரம், கோட்டவம் ஆகிய கிராமங்களில், விவசாயிகள் தாமதமாக இயந்திர நடவு செய்துள்ளனர்.
நடவு செய்து 40 நாள்களாகி பயிர் வளர்ந்து வரும் நிலையில் நெல்மணிகள் முளைக்கும் தண்டில் ஆனைக்கொம்பன் ஈ தாக்கியதில் சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமாகியுள்ளன. ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் இந்த பாதிப்பு அதிக இழப்பை ஏற்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செம்பனார்கோவில் வட்டார வேளாண் துணை இயக்குநர் தாமஸ் தலைமையில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ஆனந்தி, வட்டார வேளாண்மை அலுவலர் என்.குமரன் உள்ளிட்ட வேளாண் துறை அலுவலர்கள் பாதிக்கப்பட்ட வயல்களில் இன்று ஆய்வு செய்தனர்.
வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு ஆய்வு முடிந்த பின்னர் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ஆனந்தி, “சரியான நேரத்தில் விதைக்காததாலும், அதிகளவு மழை பெய்ததாலும் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள நெல் ரகத்தை விதைத்திருந்தால் இந்நோயின் தாக்கம் குறைவாக இருந்திருக்கும். அதிகமான தாக்குதல் இருப்பதால் மகசூலை அதிகம் எதிர்பார்க்கமுடியாது. செப்ரோனில் என்ற குருணை மருந்தை ஏக்கருக்கு 6 கிலோ மணலுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம் இந்நோய் மற்ற வயல்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்தலாம்”என்றார்.
இதையும் படிங்க:வாடகைக்கு கார்களை எடுத்து, விற்பனை செய்து மாட்டிக்கொண்ட பலே கில்லாடி!