கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்டு இருந்த வழிபாட்டு தளங்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவை தொடர்ந்து இன்று( ஜூன்.8) திறக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 74 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் பகவான் கோயில் திறக்கப்பட்டது.
இங்கு தகுந்த இடைவெளியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்ய வட்டமிடப்பட்டும், பக்தர்களுக்கு கிருமி நாசினி, தெர்மல் கருவி பரிசோதனை உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், பக்தர்கள் அர்ச்சனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தரிசனம் மட்டுமே செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் வழிபடும் காட்சி...! குறிப்பாக நலன் குளத்தில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு, குளத்தின் நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. அதுபோல 10 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைகளும், 60 வயதிற்கு மேல் உள்ள முதியவர்களும் கோவிலுக்கு வருவதைத் தவிர்க்கலாம் என்றும், வெளி மாவட்டம், வெளிமாநில பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்குத் தற்போதைக்கு அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டாலும், குறைந்தளவிலான பக்தர்களே இன்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க:வழிபாட்டுத் தலங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளைக் கோரிய மனு தள்ளுபடி