நாகப்பட்டினம்:தேவாரப் பதிகங்கள் பாடம் பெற்ற 275 சிவாலயங்கள் இந்தியாவில் அமைந்துள்ளது. அவற்றில் கேதார்நாத் உள்ளிட்ட ஐந்து சிவாலயங்கள் வடநாட்டில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீன மடத்தின் சார்பில் இமயமலையில் 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் ஆலயத்தில் நேற்று முன்தினம் (அக். 13) 100 சிவாச்சாரியார்களைக் கொண்டு ருத்ர ஹோமம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கேதார்நாத் ஆலயம் பற்றி திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பதிகங்கள் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கல்வெட்டுகளாக கேதார்நாத் ஆலயத்தில் பொறிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீன 27ஆவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் கட்டளை தம்புரான சுவாமிகள் பங்கேற்றனர்.