மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி ஓஎன்ஜிசி மற்றும் சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தினால் தானியங்கி இயந்திரத்திலிருந்து மீண்டும் மஞ்சள் துணிப்பை வழங்கும் வகையில் ரூ.1,40,000 செலவில் அமைக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று திறந்து வைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ் ஒளி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஒஎன்ஜிசி காவேரி அசெட் செயல் இயக்குநர் அனுராக், உற்பத்தி பிரிவு தலைவர் பி.என்.மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன், ”காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை.கடந்த 3 வருடங்களாக துரப்பன பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையிலே உள்ளது. இருக்கின்ற எண்ணெய் கிணறுகளில் மட்டும் வருகின்ற எண்ணெய்யை எடுத்து வருகிறோம். அதுவும் வேகமாக குறைந்து வருகிறது. புதிய கிணறுகள் அமைக்காத காரணத்தால் எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு 1126 டன் இருந்த எண்ணெய் உற்பத்தி தற்போது 530 டன்னாக குறைந்துவிட்டது.