மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காடு சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மயிலாடுதுறை நோக்கி, ‘காய்கறி, அவசரம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், அந்த லாரியில் 60 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான ஹான்ஸ் 1,80,000 பாக்கெட்கள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் பூரணஜோதி (32) என்பவரை கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், ஒரு கோடி மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.