சாலைகளின் இரு மருங்கிலும் பச்சை பசேலென நெற்கதிர்கள், வழிநெடுகிலும் சிலுசிலுவென பாயும் ஓடைகள், வயல்வெளிகளில் பெண்களின் தன்னே நானே கீதம், தென்றலுக்கு ஏற்றாற்போல் ஆடி, அசையும் நெல்மணிகள் என, தஞ்சை தரணி எங்கும் ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த பூமி, இன்று வறண்டு பொட்டல்காடு பூமியாக மாறி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி காவிரியிலிருந்து தண்ணீர் வரும். அதனைக் கொண்டு குறுவை சாகுபடியைத் தொடங்கலாம் எனக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு கண்ணீர் தான் மிச்சம். ஏனென்றால், கடந்த ஏழாண்டுகள் போலவே ஜூன் 12ஆம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை 8ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் திறக்க முடியாமல் தமிழ்நாடு அரசு கைவிரித்துள்ளது.
இதனால் கலங்கிப் போய் நிற்கும் டெல்டா மாவட்ட கடைமடை விவசாயிகள், குறுவை சாகுபடியை நம்பி இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கரில் பயிர் செய்ய 13 லட்சம் விவசாயிகள் தயாராகி வந்தனர். இதற்காக வயல்வெளி உளவு பணியைத் தொடங்கி அவர்களின் தலைமையில் இடியாய் வந்திறங்கியது மேட்டூர் அணை இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படாது என்ற செய்தி.
டெல்டா மாவட்டங்களில், எட்டாண்டுகளாக பொய்து போன குறுவை சாகுபடி! குறுவைக்குத் தண்ணீர் இல்லாததால் விவசாயப் பணிகளைச் செய்ய முடியாத கூலித் தொழிலாளர்கள், தற்போது 100 நாள் பணிக்குச் செல்கின்றனர். இதில் கிடைக்கும் சொற்ப வருமானமே குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை எனக் கூறும் கூலி விவசாயிகள், குறுவை சாகுபடி உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே தங்களது வாழ்வாதாரமும் காக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாய வேலை கிடைக்காததால் தற்போது 100 நாள் வேலையில் வரும் வருமானம், இலவச அரிசியும் தற்கால பசியைப் போக்கி வருவதாகக் கூறும் விவசாய பெண்கள், போதிய மழை இல்லாததால் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் கிடைக்காமல் இருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் வடகிழக்கு பருவமழையின்போது கர்நாடக அரசு மிதமிஞ்சிய தண்ணீரைத் தமிழ்நாட்டை நோக்கி விடுவதும், அதனைச் சேமிக்க முடியாத கட்டமைப்புகள் தமிழ்நாட்டில் இல்லாததும் தான் காரணம் என சொல்லும் கடைமடை விவசாயிகள், காவிரியில் நீர் இருப்பு உள்ள போதே தண்ணீர் பெற்று விவசாயிகளுக்கு வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
கனமழையின் போது கடலில் வீணாகக் கலக்கும் மழை நீரைச் சேமித்து வைக்கக் கடைமடைப் பகுதிகளில் கதவுடன் கூடிய தடுப்பணைகள் கட்ட வேண்டும் எனவும், யோசனை கூறுகின்றன. மேலும் காவிரியிலிருந்து தண்ணீர் தராமல் டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக மாற்றி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் எண்ணத்தில் மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்படுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளதாக அவர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.