மயிலாடுதுறை: தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் கடந்த மாதம் 31ஆம் தேதி தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக சந்திரபாடி மீனவ கிராமத்தின் பைபர் படகை சிறைபிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்யக்கோரி அம்மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில், சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவக் கிராமங்கள் தொடர் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளாக இன்று (ஆகஸ்ட் 04) வரை போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்துவது தொடர்பாக 9 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தரங்கம்பாடி தலைமை மீனவகிராமம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.
இதையும் படிங்க:"மதுவுக்கு எதிராக போராட திமுக எங்களுடன் வர வேண்டும்" - கனிமொழிக்கு அன்புமணி அழைப்பு