மயிலாடுதுறை:தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று (ஜனவரி 15) நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் தரங்கம்பாடி தாலுகா, கனிவாசல் கிராமத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு பொங்கல் பானை, கரும்பு வரைந்து வண்ண கோலமிட்டடனர். பராம்பரிய உடையான வேட்டி, சட்டை புடவை கட்டி, புத்தாடை அணிந்திருந்தனர்.
பூ, பழங்கள், காய்கறிகள், கரும்பு ஆகியவை வீட்டின் வாசலில் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டனர். பின்னர் புதுப்பானையை அடுப்பில் வைத்து பால், புத்தரிசியிட்டு பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும்போது குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!! என குலவையிட்டனர்.
மேலும் இப்பகுதியைச் சார்ந்த புதிதாக திருமணமான தம்பதியினர் இணைந்து புதிய பொங்கல் பானையில் ஒன்றாக பொங்கல் பொங்கியும்; பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்றும் கூறி, தல பொங்கலை மகிழ்ச்சி பொங்க குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: Pongal celebrations: 65 ஆண்டுகள் கடந்தும் சமத்துவப் பொங்கல்!