தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேளாங்கண்ணியில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. குவியும் சுற்றுலாப் பயணிகள்! - கடலோர காவல் படையினர்

New Year Celebration: புத்தாண்டை முன்னிட்டு வேளாங்கண்ணியில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள், குடும்பத்தோடு குதூகலமாக கடலில் குளித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

new year celebration in velankanni
வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 5:12 PM IST

வேளாங்கண்ணியில் புத்தாண்டு கொண்டாட்டம்

நாகப்பட்டினம்: 2023ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆங்கிலப் புத்தாண்டு, நாளை (ஜன.01) பிறக்க உள்ளது. இந்த நிலையில், 2024 புத்தாண்டை வரவேற்பதற்காக உலக மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். குறிப்பாக நண்பர்களோடும், உறவினர்களோடும், குடும்பத்தினரோடும் இணைந்து சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று, புத்தாண்டை கொண்டாடுவதற்கு ஆவலாக உள்ளனர்.

அந்த வகையில், வேளாங்கண்ணிக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். நாகை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக வேளாங்கண்ணி அமைந்துள்ளது. இங்கு கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கக்கூடிய புனித ஆரோக்ய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மேலும், கடற்கரை நகரமாக விளங்கக் கூடிய வேளாங்கண்ணி ஆன்மிக நகரம் மட்டுமல்லாமல், பொழுதுபோக்கு சுற்றுலாத் தளமாகவும் விளங்குகிறது.

இதனால், இங்கு பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் ஆண்டுதோறும் அதிக அளவில் இருக்கும். அதேபோன்று, வேளாங்கண்ணியில் புத்தாண்டு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் உற்சாகமாக களைகட்டும். மேலும், புனித ஆரோக்ய அன்னை பேராலயத்தில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெறும்.

இந்த நிலையில், இன்று (டிச.31) இரவு 12 மணிக்கு பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடுவர். எனவே, இதில் கலந்து கொள்வதற்காகவும், புத்தாண்டை கொண்டாடுவதற்காகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வேளாங்கண்ணிக்கு படையெடுத்து வருகின்றனர்.

தங்களது நண்பர்கள், உறவினர்களோடு வருகை தந்தும் மற்றும் குடும்பம் குடும்பமாகவும் சுற்றுலாப் பயணிகள் வருவதால், வேளாங்கண்ணி பேராலயம், கடற்கறை சாலை, பழைய மாதா கோயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக கடலில் குடும்பத்தோடு உற்சாகமாக குளித்தும், செல்பி எடுத்தும் விடுமுறையைக் கழித்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒட்டக சவாரி, கார், பைக் சவாரிகளில் குழந்தைகள் உற்சாகமாக சென்று வருகின்றனர். மேலும் மேல்மருவத்தூர், பழனி, சபரிமலை செல்லக் கூடிய பக்தர்களும் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து செல்வதால் கூட்டம் களைகட்டி உள்ளது.

தற்போது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் உள்ளதால், கடலில் குளிக்கும்போது அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக 50க்கும் மேற்பட்ட கடலோர காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால், வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க:2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்..

ABOUT THE AUTHOR

...view details