தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் ரூ. 150 கோடியில் புதிய திட்டம்:  அமைச்சர் மெய்யநாதன் தகவல் - local body election

மயிலாடுதுறை நகராட்சியில் ரூ. 150 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் விரைவில் அமைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

By

Published : Dec 21, 2021, 10:41 AM IST

மயிலாடுதுறை: மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.

முதலமைச்சரை பாராட்டிய உயர்நீதிமன்றம்

அப்போது பேசிய அவர், “ஒரு முதலமைச்சர் எவ்வளவு உழைக்க முடியுமோ, அதைவிட அதிகமாக முதலமைச்சர் ஸ்டாலின் உழைப்பதாக உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவின் மூலம் அனைவரின் பாராட்டுதல்களையும் அவர் பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனம்

முதலமைச்சருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கவனமாக கையாண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றி 100 விழுக்காடு வெற்றியை பெற அயராது உழைக்க வேண்டும். கூட்டணி கட்சியினரின் மனம் நோகாமல், அவர்களை அரவணைத்துச் செல்ல முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து வெற்றி பெற்றதைப் போன்றே, உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கான பட்டியலும் முதலமைச்சரிடம் உள்ளது.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

முக்கிய பிரச்சினை

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படாததே காரணம். இதற்கு ரூ. 150 கோடியில் புதிய பாதாள சாக்கடைத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் பெற்றுத்தரப்படும்.

மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காகப் பத்திரப் பதிவு செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைப்பார்” என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'தொழில்துறையில் இலக்கு நிர்ணயித்து சிறப்பான திட்டங்களை பிரதமர் அளித்துள்ளார்' -ஆளுநர் ஆர்.என்.ரவி

ABOUT THE AUTHOR

...view details