மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோயிலில் ’அபயாம்பிகை’ என்ற பெண் யானை கடந்த 50 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகிறது. திருக்கோயிலில் பக்தர்கள் அபயாம்பிகை யானையுடன் மிகுந்த பாசத்தோடு பழகி வருகின்றனர்.
கோயில் திருவிழா காலங்களில் சுவாமி புறப்பாட்டின் போது அபயாம்பிகை யானை அலங்கரிக்கப்பட்டு, சுவாமிக்கு முன்பு நடந்து செல்லும். கோயில் யானை அபயாம்பிகை குளிப்பதற்கு சவர்பாத் அமைத்தும், காலுக்கு வெள்ளி கொலுசு மாட்டியும், யானை கொட்டகையில் வெயில் காலங்களில் மகிழ்ச்சியுடன் இருக்க மின்விசிறி வைத்தும் பக்தர்கள் அழகு பார்த்தனர்.
மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’க்கு சங்கிலியுடன் கூடிய புதிய பெயர் பலகை!! அந்த வகையில் யானைக்கு மேலும் அழகுகூட்டும் விதமாக பக்தர் ஒருவர் கேரளாவில் இருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரூ.15,000 மதிப்புள்ள ’அபயாம்பிகை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட சங்கிலியுடன் கூடிய பெயர் பலகையை அன்பளிப்பாக வழங்கினார்.
இதை முன்னிட்டு, மஹா கணபதி சன்னதியில் யானை அபயாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெயர் பலகை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அபயாம்பிகை யானையின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 300 ஏக்கர் பரப்பிலான பயிர்கள் சேதம்