மயிலாடுதுறை: தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையில் உழவர்களுக்கு உற்ற நண்பனாக விளங்கும் ஆடு, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் 2ம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, நெட்டி மாலை அணிவித்து அலங்காரம் செய்து பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இவ்விழாவில் ஆடு, மாடுகளை அலங்கரிப்பதற்கான முக்கிய இடத்தை பிடிப்பது பாரம்பரிய நெட்டி மாலைகளே.
இந்த நெட்டி மாலைகளை தயார் செய்வதற்கு பாண்டிச்சேரிக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கி, அங்கு நீர் நிலைகளில் விளையக்கூடிய பச்சை பசேல் என உயரமாக தக்கையைப் போன்று இலகுவாக இருக்கும் நெட்டிச் செடிகளைப் பறித்தும், காரைக்காலில் இருந்து தாழமோந்தை, கும்பகோணத்திலிருந்து பட்டு சாயம் ஆகியவற்றை வாங்கி வந்து நெட்டி மாலைகளைத் தயார் செய்கின்றனர்.
பின்னர், அதன் தோலை கத்தியால் சீவி, வெயிலில் காய வைத்து நன்கு உலர்த்தி, சிறுசிறு துண்டுகளாக வெட்டி நெட்டி தக்கைகளை உருவாக்குகின்றனர். பின், சாயத்தில் நனைத்து காயவைத்து தாழமோந்தை நார்களில் வண்ணம் பூசப்பட்ட நெட்டிகளைக் கோர்த்து, பூபோன்று குஞ்சம் அமைத்து அழகாக கண்கவரும் வகையில் நெட்டி மாலைகளைத் தயார் செய்கின்றனர்.
மூன்று மாதங்களாகத் தயாரிக்கப்படும் நெட்டி மாலைகள் பொங்கல் பண்டிகையின் போது 3 நாட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஆடுகளுக்கு போடும் ஒற்றை மாலை ரூ.15, மாடுகளுக்கு போடும் இரட்டை மாலை ரூ.20 என்று விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நெட்டி மாலைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நெட்டிமாலைத் தொழிலை குடிசைத் தொழிலாக செய்து வந்தனர். ஆனால் நெட்டிச் செடிகள் அழிந்ததால் தற்போது மூங்கில்தோட்டம், நல்லத்துக்குடி, கொள்ளிடம், மேலவல்லம் உள்ளிட்ட சில கிராமங்களில் மட்டுமே சொற்ப நிலையிலான குடும்பத்தினரே நெட்டிமாலைத் தொழிலை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், மூங்கில்தோட்டம் கிராமத்தில் சிவசங்கர் என்பவரது குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக நெட்டி மாலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக இணைந்து மாட்டு பொங்கலை முன்னிட்டு, கடந்த மூன்று மாதங்களாக நெட்டி மாலைத் தயாரிப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சிவசங்கர் கூறுகையில், "மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்டி மாலைகளைத் தயாரிக்கும் பணியில் கூட்டுக் குடும்பமாக ஈடுபட்டு வருகிறோம். தற்போது நெட்டி மாலைத் தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விட்டது. இந்த நெட்டிகளை சென்னை மற்றும் பாண்டிச்சேரிக்கு சென்று, அங்கு கண்மாய் ஓரங்களில் விளையக்கூடிய நெட்டிச் செடிகளையும், காரைக்காலில் இருந்து தாழமோந்தை, கும்பகோணத்திலிருந்து பட்டுசாயம் ஆகியவற்றை வாங்கி வந்து நெட்டி மாலைகளைத் தயார் செய்கின்றோம்.
இயற்கையான பொருட்களால் தயாரிக்கப்படும் நெட்டி மாலைகளை கால்நடைகள் திண்றாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதால் நெட்டி மாலை மவுசு தற்போது வரை குறையாமல் உள்ளது. இந்த நெட்டி மாலைகள் தயாரிக்கும் தொழிலில் போதிய லாபம் கிடைக்காவிட்டாலும் ஆடு, மாடுகளை குலதெய்வமாக வணங்குவதால், பாரம்பரியமாக செய்துவரும் தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதால் நெட்டி மாலைத்தொழிலை விடாமல் செய்து வருவதாக கூறுகின்றார்.
பிளாஸ்டிக் மாலைகளை கால்நடைகள் உண்பதால் அவை கால்நடைகளுக்கு தீங்கினை ஏற்படுத்துகிறது. இதனால், பொதுமக்கள் பிளாஸ்டிக் மாலைகளைத் தவிர்த்து பாரம்பரிய நெட்டி மாலைகளைப் பயன்படுத்த வேண்டும். மேலும், தமிழக அரசு நெட்டி மாலைகள் தயாரிக்கும் தொழில் செய்ய மானியத்துடன் கடன் வசதி செய்து தந்து தொழில் நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும். வரும் ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் நெட்டி மாலையைச் சேர்க்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் தமிழ்நாடு: திருப்பூரில் களைகட்டும் பித்தளை பானைகள் தயாரிப்பு..