மதுரை:நியோமேக்ஸ் நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி மற்றும் பாலசுப்பிரமணியன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "மதுரையை தலைமையகமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, கமலகண்ணன் மற்றும் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சை என பல மாவட்டங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குனரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் ஆயிரம் மனைகளை உள்ளடக்கி, லே-அவுட் உருவாக்காப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம். மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம்.
இந்நிலையில், நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களிடம் முழு விபரங்களும் தெரிவிக்கப்பட்ட பின்னர், டெபாசிட் பெறப்பட்டு, அதற்கான ரசீதும் கொடுக்கப்படுகிறது. நிலங்கள் விற்பனைக்குப் பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது.
NEOMAX GROUP இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில், 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடியில் 2,249.565 ஏக்கருக்கான அரசு ஒப்புதலைப் பெற்றுள்ளது. நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திரப் பதிவு செய்யத் தயாராக உள்ளன.
நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் நிலங்கள் ஏராளமாக உள்ளன. எனவே, எங்கள் மீது புகார் அளித்தவர்களுக்கு நிலங்களை வழங்கி பிரச்னையை சரி செய்ய விரும்புகிறோம். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உரிய நடவடிக்கை மற்றும் தீர்வு காண வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு இன்று (செப்.27) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, "இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தமிழகம் முழுவதும் உள்ளதால், மாவட்ட அளவில் குழுக்களை அமைப்பது பயனற்றதாகவே இருக்கும். எனவே மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறும் வகையில், குழு அமைக்க வேண்டும். இதற்கும் காவல் துறை நடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை. ஆகையால், காவலர்கள் அவர்களது நடவடிக்கையைத் தொடரலாம்" என கருத்து தெரிவித்தார். அப்போது வழக்கில் ஆஜராக, அரசு தரப்பில் தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:அரசு நிலத்தை அபகரித்த வழக்கு; அரசியல் பிரமுகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!