புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழா நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழா, வருகிற 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. அதனை முன்னிட்டு, இன்று (டிச.10) அதிகாலை கந்தூரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான, நாகூர் ஆண்டவர் தர்காவில் பாய்மரம் ஏற்றும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக, நாகூர் ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிஃபா மஸ்தான் சாகிபு தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் (கோபுரங்களிலும்) பாய்மரங்கள் ஏற்றப்பட்டது. அப்போது, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் மற்ற சமூகத்தைச் சார்ந்த மக்கள் கூடியிருந்தனர்.
மேலும், கொடியேற்றத்தின்போது ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி கந்தூரி திருவிழாவின் தொடக்க தினத்தை கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்று விழா வருகிற 14ஆம் தேதியும், அதேபோல் சந்தனக்கூடு ஊர்வலம் இம்மாதாம் 23ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நாகூர் ஆண்டவர் தர்காவின் கந்தூரி விழாவில் பங்கேற்பதற்காக, சுற்றுவட்டார மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமிய மக்கள் வந்துள்ளனர். மேலும், கந்தூரி விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் நாகூர் தர்கா நிர்வாகமும் இணைந்து செய்து வருகின்றன.
இதையும் படிங்க:ஈரோட்டில் இரவில் கனமழை.. குண்டேரிப்பள்ளம் அணை நீர்மட்டம் 34 அடியாக உயர்வு!