நாகூர் தர்காவின் 467ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலம் நாகப்பட்டினம்:நாகூரில் உள்ள உலகப் புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் 10 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாதி, மதம் பேதமின்றி பங்கேற்பார்கள்.
அதேபோல், இந்த ஆண்டும் நாகூர் தர்காவின் 467வது கந்தூரி விழா, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியோடு துவங்கியது. தொடர்ந்து டிசம்பர் 14ஆம் தேதி இரவு, நாகூர் ஆண்டவர் தர்காவின் 5 மினாராக்களில் கொடியேற்றப்பட்டு, கந்தூரி விழா கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து டிசம்பர் 16ஆம் தேதி காலை சந்தனக்கட்டை அரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று (டிச.23) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களுடன், நாகை யாஹூசைன் பள்ளி தெரு வாசலில் இருந்து கோலாகலமாகத் துவங்கியது.
முன்னதாக, காலை சந்தனம் பிழிதல், இரவு தஞ்சாவூர் அரண்மனைப் போர்வை மற்றும் தங்கப்போர்வை போர்த்துதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், நாகை எஸ்பி ஹர்ஷ் சிங், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினத்திலுள்ள முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சந்தன கூட்டின் மீது, வழி நெடுகிலும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்களைத் தூவி வழிபட்டனர். ஸ்தூபி இசை நடனத்துக்கு ஏற்றவாறு கோலாட்டம், தாரை தப்பட்டைகள், நையாண்டி மேளம், பேண்டு வாத்தியங்கள் என கோலாகலமாக நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் நடனமாடி இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இதனையடுத்து, சந்தனக்கூடு ஊர்வலம் அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்ஹா வந்தடைந்த பின்னர், நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனக் குடம் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெறுவதை ஒட்டி, நாகை மாவட்ட காவல்துறை சார்பாக 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நாளை (டிச.25) கடற்கரைக்கு பீர் செல்லும் நிகழ்ச்சியும், வரும் 27ஆம் தேதி புனித கொடி இறக்கப்பட்டு கந்தூரி விழா நிறைவு பெறும்.
இதையும் படிங்க:“இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லக்கூட முடியாது என்பது தான் திராவிட மாடல்” - முதலமைச்சரை சாடிய வானதி சீனிவாசன்!