நாகை:கரோனா இரண்டாம் அலை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், வழிபாட்டுத் தலங்களை இன்றுமுதல் (ஜூலை 5) திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில், உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவில் சிறப்புப் பிரார்த்தனை இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்கா திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, காலை முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர்.
சிறப்பு பிரார்த்தனை
தர்காவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு வெப்ப பரிசோதனை, முகக்கவசம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை 6 மணிக்குத் தொடங்கிய சிறப்பு திருப்பலியில் கரோனா பேரிடரிலிருந்து நாட்டு மக்கள் மீண்டுவர சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
பேராலயம் திறக்கப்பட்ட முதல் நாளே நாகப்பட்டினம் மட்டுமின்றி, ராமநாதபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தந்தனர்.
கரோனா பரவல் காரணமாக, ஆலயத்தின் வெளியே சமூக இடைவெளியுடன் நாற்காலிகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் திருப்பலியில் பங்கேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், வேளாங்கண்ணி வருகின்ற பக்தர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ள பேராலய பங்குத் தந்தை, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு மாதாவை தரிசித்தது மகிழ்ச்சியும், மன நிம்மதியும் அளிப்பதாகப் பக்தர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்