இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியமானது ரமலான் நோன்பு. இந்த ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற, மத நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் நாகூர் தர்காவின் பரம்பரை ஆதீனமும், முன்னாள் பிரசிடென்டுமான செய்யது முஹம்மது கலிபா சாஹிப் தமிழக அரசிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரமலான் நோன்பு; அரசுக்கு நாகூர் தர்கா ஆதீனம் கோரிக்கை! - நோன்பு கஞ்சி
நாகை: ரமலான் நோன்பை முன்னிட்டு விலையில்லா அரிசியினை கடந்தாண்டை விட கூடுதலாகவும், தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் காலதாமதமின்றி உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்று நாகூர் தர்கா ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளது.
'தமிழக அரசு புனித ரமலான் நோன்பிற்காக பள்ளி வாசல்களுக்கும், தர்காக்களுக்கும் விலையில்லா அரிசியை வழங்கி வருவதற்கு, தமிழக இஸ்லாமிய மக்கள மனதார நன்றி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழக அரசு பள்ளி வாசல்களுக்கு 5.15 மெட்ரிக் டன் விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்டது. இந்த ஆண்டு இதனை உயர்த்த வேண்டும் எனவும், தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கு இந்த ஆண்டு பரிசிலீப்பதாக தமிழக அரசிடமிருந்து பதில் வந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசு வழங்கும் அரிசியை 6000 மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும். மேலும், அந்தெந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் நோன்பு பிறைக்கு (மே 6ஆம் தேதி) முன்பாகவே விலையில்லா அரிசியை அந்தந்த உரிய பள்ளி வாசலுக்கும், உரிய தர்காவிற்கும், தைக்காலுக்கும் சேர்த்திட வேண்டும். இதன்மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும். தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதி அமுலில் இருப்பதால் உரிய அனுமதி பெற்று காலதாமதமின்றி உரிய நேரத்திலும் அரசு வழங்கிட வேண்டும். ஆகவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் கடந்த ஆண்டை விட அதிகமாகவும், உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்றும் அரசு இதற்கான ஆவணங்களை உடனே செய்ய வேண்டும்' என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.