2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் பாதிக்கப்பட்ட கடற்கரையோரப் பகுதி மக்களுக்கு மறுவாழ்வுக்காக தமிழ்நாடு அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள் நிரந்தர குடியிருப்புகளைக் கட்டி கொடுத்தனர். அதில் ஒருபகுதியான நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சேர்ந்த மக்களுக்கு, புதிய நம்பியார் நகரில் 892 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
இந்த வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதிலிருந்து தரம் குறைவாக உள்ளதென மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து புகார் அளித்துவந்துள்ளதாகவும், அதற்கு மாவட்ட நிர்வாகம் இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டும் அப்பகுதி மக்கள், மழைக்காலங்கள் மட்டுமல்லாமல் அவ்வப்போது வீட்டின் மேல் தளத்தின் கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து சேதம் அடைவதால் குடியிருக்க அச்சப்பட்டு ஏராளமானோர் காலி செய்து வேறு இடத்துக்கு சென்றுவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.