நாகப்பட்டினம்:நாகை - இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய "செரியாபாணி" கப்பல் 50 பயணிகளுடன் நாகையிலிருந்து இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றது.
40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை துவங்கியது. ஏற்கனவே நாகையிலிருந்து இயக்கப்பட்ட வ.உ.சிதம்பரனார் பயணிகள் கப்பல் தீ விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது மீண்டும் புதிதாக கப்பல் சேவை துவங்கப்பட்டிருப்பது, இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே ஒரு நல்லுணர்வைப் பேணும் வகையில் அமைந்துள்ளது.
இதற்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் நாகை துறைமுகத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் "செரியாபாணி" என பெயரிட்டப்பட்ட கப்பல் கொச்சினில் இருந்து நாகைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் கப்பலின் சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த அக்டோபர் 8 மற்றும் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து சுமார் 60 கடல் மைல் நாட்டிகல் தூரத்திலுள்ள இலங்கை காங்கேசன்துறையை கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும்.