நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த முஹம்மது பக்ருதீன்(63) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் திட்டச்சேரியிலிருந்து காரைக்கால் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது, தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் வைத்திருந்த ரூ.61,000 பணத்தை தவறவிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அவ்வழியே சென்றுகொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர் பக்ருதீன் தவறவிட்ட பணப்பையை எடுத்து, அருகில் இருந்த வாழ்மங்கலம் சோதனைச்சாவடியில் ஒப்படைத்தார்.
பின்னர் திட்டச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் அந்த பையை சோதனையிட்டபோது அதில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு அந்த பணம் முகம்மது பக்ருதீன் தவறவிட்டதுதான் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, உரிய நபரிடம் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கேள்விபட்ட நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகர், வழியில் கிடைத்த பணத்தின் மீது ஆசை கொள்ளாமால் காவல் துறையில் ஒப்படைத்த அப்பாஸ் மந்திரி, அதனை கையாடல் செய்யாமல் உரிய நபரிடம் ஒப்படைக்க உதவிய எஸ்.ஐ பார்த்திபன் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து பாராட்டினார்.