தமிழர்களின் பாராம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகப்பட்டினத்தில் உள்ள SOS குழந்தைகள் நல காப்பகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இட்டு அங்குள்ள குழந்தைகள் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடினர்.
இவ்விழாவில் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்து கலந்துகொண்டார். காப்பக ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுடன் அவர் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவினை கொண்டாடினார். குழந்தைகள் தங்களது தனித்திறமைகளை காட்டும் விதத்தில் பாட்டு பாடியும், நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்பெல்லாம் பெற்றோர்களுடன் குடும்பத்தில் கொண்டாடியபோது மூன்று நான்கு பேர்தான் இருந்தோம், தற்போது இந்தக் குழந்தைகள் காப்பகத்தில் எங்களைப் போல நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளுடன் கொண்டாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைகள் விவசாயிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்ததோடு நலிந்து வரும் விவசாயம் செழிக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக இவ்விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய நாகை எஸ்பி பொங்கல் விழாவை முன்னிட்டு முன்னதாக கதிரவனுக்கு படையலிட்டு பூஜை செய்து புதுப்பானையில் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து புதுப்பானையில் வைத்த பொங்கல் பொங்கிவர அனைவரும் பொங்கலோ பொங்கல் என உற்சாகத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினமும் குழந்தைகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்.