நாகப்பட்டினம்: நாகூரை அடுத்த அமிர்தநகர் வண்ணன்குளம் மேற்கரையில் வசிக்கும் கூலித்தொழிலாளி சுப்பிரமணி, சித்ரா தம்பதியினரின் மூன்றாவது மகள் சுபாஷினி. இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிசியோதெரபிஸ்ட் பயின்று வந்தார். இவரது கல்லூரி கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பணம் கட்டாத மாணவிகளுக்கு கட்டாய விடுப்பு அளித்ததுடன் கல்லூரிக்கு வந்த மாணவிகளை வெளியே நிற்க வைத்தும், படிப்புக்குப் பணம் கட்ட முடியாதவர்களுக்கு படிப்பு எதற்கு எனக்கேட்டு அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் மாணவி சுபாஷினி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோரிடம் கண்ணீர்விட்ட மாணவி: இந்நிலையில், பெற்றோர் பணிக்குச்சென்ற பின்னர், சுபாஷினி வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள், அவரது உடலை மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நாகை - நாகூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரா மருத்துவ மாணவி தற்கொலை - கல்லூரியில் பணம் கட்ட முடியாததால் விபரீத முடிவா? சாலை மறியல்: இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் சுகுமாரன், துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் மாணவியின் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் கண்காணிப்பாளர் அளித்த உறுதியை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டனர். சாலை மறியல் காரணமாக நாகை - நாகூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நகைக்கடன் கட்டமுடியாமல் மன உளைச்சலில் இருந்த விவசாயி தற்கொலை