தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர் மரபை மறைக்கும் முயற்சியில் மத்திய அரசு: தமிமுன் அன்சாரி கண்டனம்

நாகப்பட்டினம்: இந்திய பாரம்பரியத்தின் பின்னணி குறித்து அறிய மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தென்னிந்தியர்கள் யாரும் இடம்பெறாதது குறித்து நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 25, 2020, 1:33 PM IST

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

இந்திய பாரம்பரியத்தின் பின்னணி குறித்து அறிய மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தென்னிந்தியர்கள் யாரும் இடம் பெறவில்லை.

இதுகுறித்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான, தமிமுன் அன்சாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”12ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தியக் கலாசாரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக இந்திய அரசு அமைத்துள்ள அறிஞர் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எவரும் இடம்பெறவில்லை.

தமிழ்நாட்டை வழக்கம்போல இதிலும் புறக்கணித்திருக்கிறார்கள் என்ற கோபம் பரவலாகி வருகிறது.

இந்தியாவின் மிகத் தொன்மைவாய்ந்த மொழி தமிழ் என்பதும், தமிழரின் பண்பாடும், நாகரிகமும் மிகத் தொன்மை வாய்ந்தவை என்பதும் நிரூபிக்கப்பட்டவை.

இதை சிந்துவெளி அகழாய்வு முதல் கீழடி அகழாய்வுவரை எடுத்துக்காட்டியுள்ளன. திராவிட மொழிகள் அனைத்தும் மிக பழமை வாய்ந்த வரலாற்று மொழிகள் ஆகும்.

அதுபோல் வடகிழக்கு மாநிலங்களின் வரலாறும் தொன்மையானவை. வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த உண்மைகளைப் புறக்கணிக்கும் வகையில் மத்திய அரசு அமைத்த இந்தக் குழு பன்மைத் தன்மைகள் அற்றதாக உள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வரலாற்று திரிப்பை ஏற்படுத்தும் நோக்குடன் குறிப்பிட்ட உயர் சாதியினரை முன்னிலைப்படுத்தி இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

குதிரையை குதிரை என்றும், கடலை கடல் என்றும், மலையை மலை என்றும் சொல்வதே அறிவுடைமையாகும்.

இதை மாற்றி சித்தரிக்கும் முயற்சியில் யார் ஈடுபட முயன்றாலும் அது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாகும். இது போன்ற வரலாற்று ஆபத்துகள் ஏற்படக் கூடாது என்பதே எல்லோரின் கவலையாகும்.

எனவே இத்துறையில் வல்லமை பெற்ற தமிழர் உள்ளிட்ட தென்னகத்தை சேர்ந்தவர்களையும், வட கிழக்கு மாநிலத்தவர்களையும், பெண்கள், சிறுபான்மை சமூகத்தவர் உள்ளிட்ட பலரையும் உள்ளடக்கிய வகையில் இக்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அனைவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசு இதில் முடிவெடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details