தமிழ் நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட கூழையார் மீனவ கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வேட்டங்குடி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 660 வாக்குகள் பதிவாகின.
முரசு சின்னத்தில் தேமுதிக கட்சி வேட்பாளர் ஜலபதி போட்டியிட்டார். கடைசி நேரத்தில் பதிவான 50 வாக்குச் சீட்டுகளில் தேமுதிக சின்னத்திற்குப் பதில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் மக்கள் வாக்களித்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவீன் நாயரிடம் தேமுதிக வேட்பாளர் ஜலபதி மற்றும் அதிமுகவினர் புகார் தெரிவித்தனர்.