நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்த பட்டமங்கலம் கிராமத்தில் ஓடம்போக்கி ஆற்றிலிருந்து குருக்கத்தியில் பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் பட்டமங்கலம், சொட்டால் வண்ணம், வடக்காலத்தூர் ஆகிய மூன்று கிராம மக்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த வாய்க்கால், குருக்கத்தி, கூத்தூர், சீனிவாசபுரம், சாத்தங்குடி ஆகிய ஊர்களுக்கு வடிகாலாகவும் பயன்படுகிறது. இந்த வாய்க்காலில் குறுக்கிடும் ஆவராணி வாய்க்காலில் கீழ்குமிழி அமைத்துஉள்ளனர். தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றை சரிவர பராமரிக்காததால் தற்போது இவை அனைத்தும் சிதிலமடைந்து போய் உள்ளன. இதனால் கீழ்குமிழிமூலம் வெளியேறும் நீர், ஆவராணி வாய்க்காலில் கலந்து விடுவதால், பட்டமங்கலம் வாய்க்காலில் போதிய தண்ணீர் வருவதில்லை.
மேலும், பல ஆண்டுகளாக இந்த வாய்க்கால்தூர்வாரப்படாத நிலையில், ஆங்காங்கே புதர் மண்டிக் கிடப்பதால் தண்ணீர் முழுமையாக பாசனப் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் ஒன்றிணைந்து, தங்களுக்குள் நிதி வசூலித்து சொந்தமாக தூர்வாரியதாகவும், அதில் முகப்புப் பகுதியை மட்டுமே ஓரளவு சரிசெய்ய முடிந்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சரி செய்து வாய்க்காலை தூர்வாரினால் மட்டுமே, மூன்று கிராம விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபடமுடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :தொடங்கியது பதநீர் சீசன்... விற்பனை அமோகம்!