கன்னியாகுமரியில் சுயநிதி முறையில் மீன்வள கல்லூரி தொடங்கப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, மீன்வள கல்லூரி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சுயநிதி பிரிவு தொடங்கினால் அரசுக் கல்லூரிகளில் தற்போது பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் எனக் கூறி அனைத்து மீன்வள கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பயன்பெறவே மீன்வள சுயநிதி கல்லூரி - மீன்வள பல்கலைக்கழக துணைவேந்தர்
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறவே சுயநிதி கல்லூரியை தொடங்கவுள்ளோம், எனவே மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு திரும்ப வேண்டும் என டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழக துணைவேந்தர் பெலிக்ஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தால் நாகை மாவட்டம், தலைஞாயிறில் உள்ள அரசு மீன்வள கல்லூரி மற்றும் விடுதியை கல்லூரி நிர்வாகம் தற்காலிகமாக மூடியுள்ளது. இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் முன்பு கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ பிரதிநிகளிடம் நாளை மதியம் 2 மணிக்கு பேச்சு வார்த்தை நடத்தப்படும் என அறிவித்தனர்.
இதனிடையே பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைவேந்தர் பெலிக்ஸ், ”அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவே மீன்வளத்துறை சுயநிதி கல்லூரியை தொடங்கவுள்ளது. இதன்மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். மாணவர்கள் தவறாக புரிந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அரசுக்கு நிதி தேவைப்படுவதால்தான் சுயநிதி கல்லூரியை தொடங்க வேண்டிய அவசியமாகிறது. ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்கலைகழகம் தொடர்ந்து செயல்படும்” என்றார்.
TAGGED:
fisheries students protest