நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாகையில் அரசு உத்தரவை மதிக்காமல் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக நாகை நகரப் பகுதி, பெரிய கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறை, அரசு அலுவலர்களின் முன்பாகவே அதிக அளவிலான மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
மேலும், சந்தைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால், நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. ஆனால், வியாபாரிகள் யாரும் அங்கு வராத காரணத்தால் அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையர், காவல் துறையினர், கடைத்தெருவில் திறந்திருந்த கடைகளுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.