மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்திற்குள்பட்ட தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவகிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.
பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 29ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவையொட்டி 147 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு எட்டு கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.
முன்னதாக காலை ஆதிவாரம், யாகசாலை தான்யம் வைத்தல், பரிவாரகலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம் நடந்தது. தொடர்ந்து ருத்ராபிஷேகம், கடஸ்தாபனம், ருத்ரஹோமம் நடைபெற்றன.
பின்னர் மாலை ஆச்சார்யர்கள் ரக்ஷாபந்தனம், கும்பஅலங்காரம், கலாகர்ஷனம் கடங்கள் யாகசாலை பிரவேசம் நடந்து முதல்கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் நடந்தன.
147 யாககுண்டங்களிலும் 108 வகையான வேதிகை, மூலிகை, நறுமண திரவியப் பொருள்களை இட்டு சிவாச்சாரியர்கள் மந்திரங்கள் முழங்கி பூர்ணாஹுதி செய்விக்கப்பட்டு அனைத்து யாக சாலைகளிலும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் தருமபுரம் ஆதினம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம்செய்தார்.
அப்போது திருநெல்வேலி கட்டளை மடம் திருஞானசம்பந்தத் தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசகத் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கார்களில் வந்து காவலர்களை அலறவைக்கும் 'இவர்கள்'!