சீன செயலியான டிக்டாக் செயலியை இந்திய அரசு தடை செய்துள்ளது. இருந்தாலும் ஏற்கெனவே மொபைலில் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி வேலை செய்கிறது.
இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் டிக்டாக் மூலம் பாடுவதையும், பேசுவதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த இளைஞர் நட்பாக பேசிப் பழகியுள்ளார். டிக்டாக் குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் பெரிதாக கவனம் எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த 6 மாதகாலமாக அந்த சிறுமிக்கு டிக்டாக் மோகம் அதிகரித்துள்ளது.
மகள் ஏதோ விளையாடுகிறாள் என்ற அலட்சியத்தில் பெற்றோர் இருந்துள்ளனர். நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும் என்ற வேகம் உருவாகியிருக்கிறது. கடந்த 6-ஆம் தேதி அன்று காலை 10 மணியளவில் திடீரென்று அந்த சிறுமியைக் காணவில்லை. இதையடுத்து, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் அரக்கோணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மயிலாடுதுறைக்கு வந்து, அந்த சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சிறுமியை ஏமாற்றி கடத்தியதாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து அரக்கோணம் விரைந்துள்ளனர்.