தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தோண்ட தோண்ட தொல்லியல் துறைக்கு ஷாக் - திரும்பிப் பார்க்க வைக்கும் திருப்பஞ்சனம்... - Discovery of historical monuments in Thiruppanchanam

வரலாறு முக்கியம். ஏனென்றால் வரலாறு ஒன்றுதான் ஆதி தமிழன் நாகரிகத்தை அடையாளம் காட்டும். கீழடியை போல் திருப்பஞ்சனத்திலும் தொல்லியல் துறை தனது ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழ்நாடு இன்னும் உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும்.

தோண்ட தோண்ட தொல்லியல் துறைக்கு ஷாக்... திரும்பி பார்க்க வைக்கும் திருப்பஞ்சனம்...
தோண்ட தோண்ட தொல்லியல் துறைக்கு ஷாக்... திரும்பி பார்க்க வைக்கும் திருப்பஞ்சனம்...

By

Published : Sep 22, 2020, 3:31 PM IST

வரலாறு முக்கியம்.. ஏனென்றால் பூர்வகுடிகளை சாதியின் பெயரால் அடிமைப்படுத்தும் ஆதிக்கச் சமூகத்தினருக்கு வரலாற்றை எடுத்துக் காட்ட வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் இருக்கட்டும். தொடக்கத்தில் பழங்காலப் பொருட்கள் கிடைத்த போது அதை சாதாரணமாக எடுத்திருந்தால், கீழடி சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகச்சிறந்த தொழில், சமூக, பொருளாதார கட்டமைப்புகளுடன் விளங்கியது நமக்கு தெரியாமல் போயிருக்கும். இதை முன் வைத்துதான் திருப்பஞ்சனத்திலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு அழைப்பு விடுக்கின்றனர் அவ்வூர் மக்கள்.

தோண்ட தோண்ட தொல்லியல் துறைக்கு ஷாக் கொடுக்கும் திருப்பஞ்சனம் - சிறப்பு தொகுப்பு

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆந்தங்குடி ஊராட்சி திருப்பஞ்சனம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன். சமீபத்தில், இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பண்ணை குட்டை அமைப்பதற்காக குளம் ஒன்றை தோண்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக முதுமக்கள் பயன்படுத்திய தாழிகள் தென்படவே, அந்த சமயத்தில் வேறு சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும் குளம் தோண்டும் பணியை அப்படியே நிறுத்திவிட்டார் சுவாமிநாதன்.

அகழ்வாராய்ச்சிக்கு வித்திட்ட குளம்
பின்னர், ஒரு ஆண்டு கழித்து மீண்டும் குளம் தோண்ட ஆரம்பித்த சுவாமிநாதன், அந்த இடத்தில் மேலும் பல முதுமக்கள் தாழிகள் கிடைத்தவுடன் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். உடனடியாக, இதுகுறித்து கீழ்வேளூர் வட்டாட்சியருக்கு தகவல் அளித்ததன் பேரில் கிராம மக்கள் உதவியுடன் சுமார் ஐந்தடி உயரமுள்ள முதுமக்கள் தாழி ஒன்றை உடையாத நிலையில் நிலத்தில் இருந்து தோண்டி எடுத்தனர்.

குளம் வெட்டும் பகுதியில் கண்டறியப்பட்ட அந்த முதுமக்கள் தாழியை தொல்லியலாளர்கள் ஆய்வு செய்த போது, தாழியின் உட்பக்கம் மண் கலயங்களும், மனித எலும்புகளும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தாழியையும், பழமையான பொருட்கள் அனைத்தையும் கைப்பற்றிய தொல்லியல் துறையினர், மேற்கட்ட ஆய்வுக்காக அவற்றை கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் பத்திரப்படுத்தினர்.

சமணர் சிலை

இதுகுறித்து ஊர் பொது மக்கள் கூறுகையில் "எங்கள் பகுதியில் முதுமக்கள் தாழி கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, இது போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குளம் தோண்டும் போது சாமி சிலை ஒன்றை கண்டெடுத்தோம், அதுமட்டுமின்றி பக்கத்து கிராமத்தில் நிலத்தை தூர்வாரிய போது, புத்தர் சிலை ஒன்று கிடைத்தது. இந்தக் குளத்தில் உடைந்த நிலையில் பல தாழிகள் தென்படுகின்றன. இப்படி நிலத்தை எங்கு தோண்டினாலும் அது எங்களுக்கு பழமையை பரிசளிக்கிறது" என்றனர்.

முழுமையாக கிடைத்த முதுமக்கள் தாழி

மேலும், திருப்பஞ்சனம் கிராமத்தில் கண்டெடுக்கும் பொருட்களை பத்திரப்படுத்தி வைப்பதோடு நிறுத்தி விடாமல், பொருட்கள் அனைத்தையும் உயர்கட்ட ஆய்வுக்கு அனுப்பி வைத்து தங்கள் ஊர் என்பதை தாண்டி தமிழர் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்றும், அரசு இப்பகுதியை முழுமையாக தொல்பொருள் ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்

சிதிலமடையாத மண்கலன்கள்

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்படும் தொன்மைவாய்ந்த பொருட்களின் அர்த்தங்கள், வரலாற்று நிரூபணங்கள் இல்லாமல் போனால் இதிகாசங்களும் கவிதைகளும் இலக்கியங்களும் வேரற்ற மரங்களாக நிற்கும். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றைத் தெரிந்துகொள்ளாதவர்கள் சிறப்பான வாழ்வை வாழ்ந்து விட முடியாது என்பார்கள் தொல்லியலாளர்கள். ஏனென்றால் வரலாறு ஒன்றுதான் ஆதி தமிழன் நாகரிகத்தை அடையாளம் காட்டும். கீழடியை போல் திருப்பஞ்சனத்திலும் தொல்லியல் துறை தனது ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழ்நாடு இன்னும் உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்யும்.

இதையும் படிங்க: சங்ககாலக் கீழடியில் உடன்கட்டை ஏறுதல் பழக்கம்? தொல்லியல் அறிஞர் சிறப்பு நேர்காணல்


For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details