மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா பெரியசாமி ரோலிங் சேர் வாங்கியதற்கு சாதிரீதியாக அவமானப்படுத்தியதாகவும், ஊராட்சி வளர்ச்சி நிதியை பெற கையெழுத்துயிடுவதற்கு கமிஷன் கேட்பதாகவும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 12ஆம் தேதி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயிலில் அமர்ந்து பிரியா பெரியசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தப் பிரச்னை தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அமலா, அவரது கணவர் ராஜகோபால் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், மன்னம்பந்தல் ஊராட்சி உறுப்பினர்கள், கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று (அக். 14) மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.